Jul 20, 2026 - 06:29 AM -
0
2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து 'கோல்டன் பூட்' (தங்க பாதணி) விருதை பிரான்ஸின் நட்சத்திர வீரர் எம்பாப்வே வென்றுள்ளார்.
கட்டாரில் நடைபெற்ற 2022 பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய எம்பாப்வே, ஆர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹட்ரிக் கோல் உட்பட மொத்தம் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார்.
அதேபோல், தற்போது 2026 உலகக் கிண்ணத் தொடரிலும் அபாரமான கோல் வேட்டையை தொடர்ந்த எம்பாப்பே, 8 போட்டிகளில் விளையாடி 10 கோல்களை அடித்து மீண்டும் அதிக கோல்கள் அடித்த வீரராக கோல்டன் பூட் விருதை கைப்பற்றி சாதனை புத்தகத்தில் தமது பெயரை பதித்துள்ளார்.
இதன் மூலம், அடுத்தடுத்து இரண்டு உலகக் கிண்ண தொடர்களில் கோல்டன் பூட் விருதை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
அதேநேரம் சேம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியின் 19 வயதான பாவ் குபார்சி, பிஃபா உலகக் கிண்ண தொடரின் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்றுள்ளார்.
இந்த விருதுக்கான போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான லமின் யமாலை பின்தள்ளி அவர் இந்த உயரிய அங்கீகாரத்தை கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்ற மிகவும் இளம் வீரர்களில் ஒருவராக பாவ் குபார்சி இடம்பிடித்துள்ளார்.
உலகக் கிண்ண தொடர் முழுவதும் சென்டர்-பேக் பொறுப்பில் விளையாடிய குபார்சி, ஸ்பெயின் அணியின் தற்காப்பு அரணாக திகழ்ந்தார்.
இறுதிப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்பெயின் கிண்ணத்தை வெல்ல பெரும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
