Jul 24, 2026 - 03:42 PM -
0
எல்ல, கரந்தகொல்லை பகுதியில் அமைந்துள்ள பிரபல நிலத்தடி நீர் தேக்கமான நில்திய பொக்குண தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் ராவணாஎல்ல வனஜீவராசிகள் அலுவலகமும் தெரிவித்துள்ளன.
ஊவா மாகாண மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் ராவணாஎல்ல வனஜீவராசிகள் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று நில்திய பொக்குணவின் நீர் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்காகச் சென்றபோதே இத்தகவல் வெளியானது.
அரசின் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாகத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என ராவணாஎல்ல வனஜீவராசிகள் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
இதற்கமைய, சுரங்கப்பாதையினுள் இருக்கும் நபர்களுடன் தொடர்புகொள்வதற்காக 'வாக்கி டாக்கி' (Walkie-talkie) சாதனங்களைப் பயன்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகளைக் காட்சிப்படுத்துதல், சுரங்கப்பாதையினுள் செல்வதற்கு அத்தியாவசியமான பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் பாதுகாப்புக் கயிறுகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் சிறப்பு மையங்களை அமைத்தல் போன்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த இடத்தை தொடர்ச்சியாக மூடிவைக்கும் தீர்மானம் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இருப்பினும், நீர் மாதிரிகளைப் பெற அதிகாரிகள் சென்ற வேளையில் அங்கு ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சுரங்கப்பாதையினுள் செல்வதற்கு அங்கிருந்த வழிகாட்டிகளிடம் (Guides) உதவி கோரப்பட்ட போதிலும், அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளனர்.
ஆயினும், அந்தத் தடைகளுக்கு மத்தியிலும் வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து சுரங்கப்பாதையினுள் இறங்கி, குளத்தின் 4 இடங்களிலிருந்து வெற்றிகரமாக நீர் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக பண்டாரவளை மற்றும் எல்ல பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் கவரும் நில்திய பொக்குண, பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2025 டிசம்பர் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு ராவணாஎல்ல வனஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நீண்டகால மூடல் காரணமாக அப்பகுதியிலுள்ள சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றியுள்ள வர்த்தகர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் பெரும் பொருளாதாரப் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் சில வழிகாட்டிகள் பலவந்தமாக குளத்தினுள் இறங்க முயன்றதால், அங்கு நுழைவதைத் தடை செய்து பண்டாரவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
