Jul 27, 2026 - 04:16 PM -
0
தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் காவடியாட்டம் தொடர்பான சர்ச்சை நிலைமை குறித்து இன்று (27) மாலை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் இதனை உறுதிப்படுத்தினார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காண்பதற்காக இன்று மாலை 4.00 மணிக்கு மாத்தறை மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியபடி, சுமார் 35-40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெவிநுவர எசல பெரஹராவில் காவடியாட்டம் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளில் அதில் கடுமையான ஒழுக்க சீர்கேடுகள் காணப்படுகின்றன.
காவடியாட்டம் ஆடுபவர்களின் ஆடைகளில் காணப்படும் சிக்கல்கள், சிலர் அரை நிர்வாணமாக அல்லது அந்தரங்க உறுப்புகள் தெரியும்படி அநாகரிகமான முறையில் நடனமாடுவது, நடனக் கலைஞர்களில் பெரும்பான்மையானோர் அதிகளவில் மது அருந்திவிட்டு பெரஹராவில் கலந்துகொள்வது போன்ற ஆடை மற்றும் நடத்தை தொடர்பான அநாகரிகமான முக்கிய காரணங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த ஆண்டு பெரஹரா நிறைவடைந்த பின்னர், பஸ்நாயக்க நிலமேயின் தலைமையில் விசேட சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.
அதன்மூலம், ஒழுக்கீனமாக நடந்துகொண்ட சில குழுக்களை இந்த ஆண்டு பெரஹராவில் இருந்து நீக்கிவிட்டு, மற்றவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஒரு பகுதிக்கு மட்டும் வாய்ப்பளிக்கும் தீர்மானத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய சில பாதாள உலகக் குழுக்களிடையே சில விவாதங்களும் அமைதியின்மைகளும் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரஹராவின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"பெரஹரா தொடர்பான முழு அதிகாரமும் பொலிஸாரிடம் இல்லை. பொலிஸாருக்கு பாதுகாப்பு வழங்கும் பணி மாத்திரமே. அதன் நிர்வாக அதிகாரம் மாவட்ட செயலாளருக்கே உள்ளது" என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார்.
நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு காவடியாட்டம் அம்சத்தை மட்டும் பெரஹராவில் இருந்து நீக்குவது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று காலை தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே அனைத்துக் குழுக்களுக்கும் பெரஹராவில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்குமாறு கோரி கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, பெரஹராவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவடியாட்டக் குழுக்களைப் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது குறித்த இறுதியானதும் தீர்மானமிக்கதுமான உடன்பாடு இன்று மாலை நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
