Jul 28, 2026 - 11:04 AM -
0
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தற்போது நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீவி தெரண தொலைக்காட்சியில் '360' நடப்பு நிகழ்வு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய இதனை வலியுறுத்தினார்.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தற்போது எட்டு நீதியரசர்கள் வெற்றிடங்கள் நிலவுவதாகவும், அரசியலமைப்பின் படி அந்தப் பதவிகளுக்கு பெயர்களைப் பரிந்துரைப்பது ஜனாதிபதியின் பொறுப்பு என்றபோதிலும், பல மாதங்களாக அந்த நியமனங்களைத் தவிர்த்து வருவது பாரிய பிரச்சினையாகும் என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்து சில வாரங்களுக்கு முன்னர் தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அரசாங்கத் தரப்பினர், சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்களைக் கூட வினவாமல் இவ்வாறு செயற்படுவதற்குப் பின்னால் பாரிய ஊழல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறானதொரு திருத்தத்திற்கான தேவை காணப்படுமாயின் அது குறித்து முதலில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என்றும், குறித்த யோசனையை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு உண்மையான தேவை இருக்குமாயின் அதற்கு முன்னர் நேரடியாகவே சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்று மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய,
"ஏன் இந்த அவசரம்? இது 100 மீற்றர் ஓட்டப்பந்தயம் போல நகர்கிறது. இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் அரசாங்கத்தில் உள்ள யாரும் இதைச் செய்யப் போவதாகக் கூறவில்லையே. அனைவரும் அத்தகைய பேச்சு அடிபடுவதாகக் கேள்விப்பட்டதாகவே கூறினார்கள். நீதி அமைச்சரும் ஒரு கட்டத்தில் தனக்குத் தெரியாது என்றே கூறியதாக நினைக்கிறேன். பின்னர் தான் அப்படி ஒரு பேச்சு இருப்பதாகக் கூறினர். எனவே இது எங்கிருந்து வந்தது.. இது உண்மையில் ஒரு ஊழல்...
உயர்நீதிமன்றத்தில் 8 வெற்றிடங்கள் உள்ளன. அவை நிரப்பப்படவில்லை. அது எமது அரசியலமைப்பை மீறும் செயலாகும். அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பெயரை அனுப்ப வேண்டும். எனவே பல மாதங்களாக நியமிக்கவில்லை என்பது அரசியலமைப்பில் உள்ள சரத்துக்கள் மற்றும் பாரம்பரியத்தை மீறுவதாகும். இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமும், ஜனாதிபதியிடமும் இதைப் பற்றி மீண்டும் சிந்தித்துப் பார்க்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். இது இந்த நேரத்தில் தேவையான ஒன்றல்ல. அதிகரிக்க வேண்டுமாயின் நாங்கள் கலந்துரையாடிப் பார்ப்போம்...
சர்வஜன வாக்கெடுப்புக்குத் தான் செல்ல வேண்டி வரும். நேரடியாக சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்று மக்களிடம் கேளுங்கள். யார் என்ன சொன்னாலும் இறுதியாக அதிகாரம் மக்கள் கையிலேயே உள்ளது... எனவே நாம் மக்களிடம் கேட்போம்..." என்றார்.
இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (27) பிற்பகல் கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
