Jul 28, 2026 - 02:01 PM -
0
இன்று (28) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய கெப் (Cab) வாகனம், விபத்திற்குப் பின்னர் நிற்காமல் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், சிறிய ரக வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
மஹிந்திரா Bolero ரக கெப் வாகனம் குறித்த வாகனங்களில் மோதிய பின்னரும், அதன் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக கார் உள்ளிட்ட நான்கு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
விபத்தை ஏற்படுத்திய கெப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கமெராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளன.
குறித்த CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச்சென்ற கெப் வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
--
