Jul 28, 2026 - 03:25 PM -
0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அமைச்சரவை தீர்மானம் குறித்து இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவும் கலந்துகொண்டதுடன், அங்கு இந்த கேள்விகளால் செய்தியாளர் சந்திப்பு சற்றே சூடான விவாதமாக மாறியதையும் காண முடிந்தது.
அங்கு ஊடகவியலாளர்கள் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த எடுக்கப்பட்ட முடிவு குறித்து கேள்வி எழுப்பியதுடன், அதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார பதிலளித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
அதன்படி, அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார:
"நாங்கள் கொடுத்த ஒரு வாக்குறுதி என்னவென்றால், நீதிமன்றங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாதக்கணக்கில், வருட கணக்கில் நீதிமன்றங்களில் வழக்குகள் செல்லும்போது மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, நீதிமன்றங்களும் ஏனைய அமைப்புகளைப் போல திறம்படச் செயல்பட வேண்டும். அந்தச் செயல்திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் வயதை உயர்த்துவது ஒரு பக்கம் மட்டுமே, நாம் இன்னும் பல கோணங்களில் தலையிடுகிறோம். முக்கியமாக, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதை விரைவுபடுத்த வேண்டும். அதுவும் வழக்குகள் தேங்கி நிற்கும் ஒரு இடமாகும். அதேபோல சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மேலும், நீதி அமைச்சு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தற்சமயம் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். நிலுவையிலுள்ள 11 இலட்சம் வழக்குகளைக் கொண்ட அமைப்பை விரைவுபடுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆனால் அதைச் செய்ய வேண்டுமானால், முக்கிய விஷயம் என்னவென்றால் — வழக்கமாக ஒரு வளர்ந்த நாட்டில் 10 இலட்சம் (1 மில்லியன்) மக்களுக்கு 40 முதல் 60 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருப்பார்கள். ஆனால் இலங்கையில் 10 இலட்சம் மக்களுக்கு சுமார் 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். உண்மையில் இந்த நெருக்கடி வர முக்கிய காரணம் என்னவென்றால், கடந்த 10-15 வருடங்களாக ஒரு முறையான கணிப்புடன் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காததால்தான் வழக்குகள் நிலுவையில் உள்ளன."
