Jul 28, 2026 - 07:25 PM -
0
இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை 'CCC+/C' ஆக எஸ்டி அண்ட் பீ குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னோக்கிய 6 முதல் 12 மாத காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி ஒருங்கிணைப்பிற்கும் ஆதரவளிக்கும் நிலைமைகள் தொடர்ந்து நிலவும் என எதிர்பார்ப்பதாக S&P குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், வெளிவாரி தேவை அழுத்தங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் சவாலான நிதியளிப்பு நிலைமைகள் உட்பட குறிப்பிடத்தக்க அபாயங்கள் தொடர்ந்து நிலவுவதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுவது மற்றும் வெளிநாட்டு நாணயமாக மாற்றுவது தொடர்பான அபாய மதிப்பீட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் Transfer and Convertibility Assessment தரவரிசையை 'CCC+' இலிருந்து 'B-' ஆக உயர்த்தியுள்ளது.
'CCC+' கடன் தரவரிசையானது இலங்கையின் கடன் நிலைமை மேலும் அபாயகரமான மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன், நாட்டின் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் சாதகமான பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என்றும் S&P தெரிவிக்கிறது.
இருப்பினும், இலங்கை அரசாங்கம் அண்மைய காலத்தில் உடனடி நிதி அல்லது கொடுப்பனவு நெருக்கடியைச் சந்திக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் உயர் பொதுக் கடன் சுமை தொடர்ந்து பிரதான சவாலாக இருப்பதுடன், அரசாங்கத்தின் வட்டிப் கொடுப்பனவுகள் அரசாங்க வருவாயில் சுமார் 45 சதவீதத்திற்குச் சமமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமை உள்ளிட்ட வெளிவாரி அழுத்தங்கள் காரணமாக இலங்கையின் வெளிவாரி மற்றும் நிதிச் சமநிலைகளில் தற்காலிக அழுத்தம் ஏற்பட்டதாகவும் S&P சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், உத்தியோகபூர்வ நிதி உதவிகள், தொடர்ச்சியான பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கைக்கு தனது நிதித் தேவைகளை நிர்வகித்துக் கொள்ளவும், நிதி மற்றும் வெளிவாரி நிலைமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என S&P எதிர்பார்க்கிறது.
எனினும், எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட பலவீனமான நிதி அல்லது வெளிவாரி செயற்பாடுகள் அல்லது புதிய நிதி மற்றும் பணப்புழக்க அழுத்தங்கள் ஏற்பட்டால், இலங்கையின் கடன் தரவரிசையைக் குறைக்கக்கூடும் என S&P Global Ratings எச்சரித்துள்ளது.
