Aug 2, 2026 - 12:26 PM
நாட்டின் அதிகளவு அஸ்வெசும பயனாளிகளைக் கொண்ட நோர்வுட் பிரதேச செயலகத்தில், பயனாளிகளின் சுமார் 30 லட்சம் ரூபாயை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண் அதிகாரிகள் ஹற்றன் பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (01) கைது செய்யப்பட்டனர்.
ஹற்றன் மாவட்ட நீதிமன்றப் பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளையும் இம்மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நோர்வுட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த ஹற்றன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரியும், மற்றொரு பெண் அதிகாரியுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களான இருவரும் 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அஸ்வெசும பயனாளிகளின் பணத்தை தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாக முதற்கட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்து, நோர்வுட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் என்பவரால் ஹற்றன் பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய, சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், நோர்வுட் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அஸ்வெசும பயனாளிகளுக்குத் தமக்குரிய அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கவில்லை என நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோனுக்கு முகவரியிடப்படாத அநாமதேய கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் செயற்பட்ட மாவட்டச் செயலாளர், சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளையும் அதே மாவட்டத்திலுள்ள வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்திருந்தார்.
பின்னர், நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் கணக்காய்வு பிரிவு மற்றும் நிதி அமைச்சின் கணக்காய்வு பிரிவு அதிகாரிகளைக் கொண்ட 10 பேர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த நிதி மோசடி தெரியவந்துள்ளது.
குறித்த அதிகாரிகள் பிரதேச செயலகத்திலேயே தங்கியிருந்து இச்சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அந்த அலுவலகத்தின்கீழ் பணியாற்றும் அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களிடமிருந்தும், நோர்வுட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவின் ஏனைய பல அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்களை தற்போது பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த நிதி மோசடியுடன் தொடர்புடைய குறித்த அலுவலகத்தைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகளின் பணியை இடைநிறுத்தம் செய்ய நுவரெலியா மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கணக்குகளில் அஸ்வெசும பயனாளிகளின் பணத்தை வைப்பிலிட்டு, பின்னர் அப்பணத்தைச் சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளும் பெற்றுக்கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அஸ்வெசும பணம் கிடைக்கவில்லை எனப் பயனாளிகள் குறித்த அலுவலகத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவியபோது, பணம் வந்திருந்தால் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருக்கும், மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என அப்பயனாளிகளை அச்சுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் அஸ்வெசும பயனாளிகளின் பணம் மற்றும் சமுர்த்திப் பயனாளிகளின் கொடுப்பனவுகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து உடனடியாகத் விசாரணை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.

