Aug 2, 2026 - 02:12 PM
இந்தியா - கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பதிவானது. இதனால் அங்கு நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் வி.டி.சதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். 8 பேர் மாயமாகி உள்ளனர். மழையால் 27 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. 196 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்தது. சுமார் 5,792 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக 209 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்த மாவட்டங்களில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக கேரளாவில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. சுமார் 24 முதல் 30 மணி நேர தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.























