Aug 2, 2026 - 10:35 PM
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையையொன்றை ஆரம்பித்துள்ளது.
மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று இன்று (02) முற்பகல் மஹர சிறைச்சாலைக்குச் சென்று அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகளும் இன்றைய தினம் மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்கிருந்த நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளனர்.
குறித்த சம்பவம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷண சுபவிக்ரம தெரிவித்துள்ளார்.
"கோடிக்கணக்கான ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு வசிப்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. ஏனெனில் அனைத்தும் முற்றாக அழித்து நாசமாக்கப்பட்டுள்ளன. இது கைதிகளின் தேவையின் பேரில் நடந்ததா அல்லது வேறு யாரினதும் தேவையின் பேரில் நடந்ததா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அறையொன்றில் இருக்கும் சிலரால் மாத்திரம் இதனைச் செய்திருக்க முடியாது. இது வேறு யாரோ ஒருவரின் திட்டமிடலுக்கு அமைவாகவே நடந்துள்ளது என நாம் பலமாக நம்புகிறோம். அந்தளவிற்குப் பாரிய விநாசம் ஏற்பட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

