Aug 6, 2026 - 06:34 AM
தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சிச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர், நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முற்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் நேற்று (5) லேக் டிரைவ் பகுதியில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, 900 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பொரளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை இந்தச் சந்தேக நபரே செலுத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த நபருடன் இருந்ததாகக் கூறப்படும் பொரளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












