Aug 8, 2026 - 03:50 PM

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பிரப்பன்வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட 297 கிலோ கஞ்சா இன்று (8) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் உட்கோட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பிரப்பன்வலசை கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த வேன் ஒன்றைச் சோதனையிட்டனர். அதில் 297 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வேனுடன் கஞ்சா பொதிகளைப் பறிமுதல் செய்த பொலிஸார், அங்கு நின்றிருந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆற்றங்கரைப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த களஞ்சீஸ்வரன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர் அவர்களை ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும், பிரப்பன்வலசை கடற்கரையிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்தவேளையிலேயே பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பான முக்கிய குற்றவாளியைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொதிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரப்பன்வலசை கடற்கரையில் 297 கிலோ கஞ்சா பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்டக் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 212 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 670 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ 800 கிராம் மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.












