Aug 14, 2026 - 04:13 PM

அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைத் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தன்சித் ஹசான் தமீம் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டார்வின் நகரில் உள்ள மார்க்கரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று (14), தன்சித் ஹசான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவின் வலுவான பந்துவீச்சை எதிர்கொண்ட அவர், 188 பந்துகளில் தனது கன்னி டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
ஒட்டுமொத்தமாக 197 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 101 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்பு, அவுஸ்திரேலிய மண்ணில் பங்களாதேஷ் வீரரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 2003 ஆம் ஆண்டு ஹன்னன் சர்கார் அடித்த 76 ஓட்டங்களே இருந்தது.
தற்போது 23 ஆண்டுகள் பிறகு அந்த சாதனையை முறியடித்துள்ள 25 வயதான தன்சித் ஹசான், அவுஸ்திரேலியாவில் சதம் விளாசிய முதல் பங்களாதேஷ் வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.























