Aug 17, 2026 - 06:00 AM

2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகள் காலப்பகுதியில் பல்வேறு காரணங்களால் 4,308 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சேவையில் இருந்து விலகியவர்களில் 3,936 ஆண் அதிகாரிகளும் 372 பெண் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
இவர்களில் அதிகளவிலானோர் கடந்த 2025 ஆம் ஆண்டிலேயே சேவையை விட்டு விலகியுள்ளனர்.
கடந்த ஆண்டில் மாத்திரம் 838 ஆண் அதிகாரிகளும் 49 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 887 பேர் விலகியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்திற்குள் 699 ஆண் அதிகாரிகளும் 59 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 758 அதிகாரிகள் சேவையை விட்டு விலகியுள்ளனர்.
தங்களது சேவைக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஓய்வு பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இதற்கு முக்கியப் பங்களித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த 5 ஆண்டுகளில் பொலிஸ் உத்தரவுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டமை காரணமாக 658 அதிகாரிகளை சேவையை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் மொத்தம் 30,815 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இதில் சாதாரண பொலிஸ் சேவைக்காக 28,164 வெற்றிடங்களும், விசேட அதிரடிப்படையில் 2,651 வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
இருப்பினும், உரிய ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்ற நடைமுறைகளுக்கு அமைவாக இந்த வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக புதிய ஆட்சேர்ப்புகளும் பதவி உயர்வுகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரிகளின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் மனநலனை உறுதிப்படுத்துவதற்கும் பொலிஸ் திணைக்களத்தால் பல நலன்புரித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள், விடுதி வசதிகளை மேம்படுத்துதல், தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவ முகாம்கள் மற்றும் தரமான மருந்துகளை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், அறுவை சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்தல், ஆலோசனைகள் மற்றும் உளவியல் திட்டங்களை நடத்துதல் அத்துடன் 'பொலிஸ்மா அதிபர் நிவாரண தினம்' மூலமாக அதிகாரிகள் நேரடியாகவே பொலிஸ்மா அதிபரைச் சந்தித்துத் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்றிட்டங்கள் மூலம் சேவை இடைவிலகலை தவிர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன.























