Aug 21, 2026 - 11:16 AM





இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், வரவிருக்கும் 2027 ஐபிஎல் (IPL) சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகாரப்பூர்வமாகப் பயிற்சியாளர் களத்தில் அவர் முதன்முறையாகத் தடம் பதிப்பதுடன், இந்திய மதிப்பில் ஆண்டிற்குச் சுமார் 6 கோடி ரூபாவுக்கு மேல் சம்பளமாகப் பெறவுள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரிலேயே அதிக சம்பளம் வாங்கும் இந்தியப் பயிற்சியாளர்களில் ஒருவராகவும், ஒட்டுமொத்தப் பயிற்சியாளர்கள் பட்டியலில் 4 ஆவது இடத்தையும் அவர் பிடிக்கிறார். 2027 - 2028 ஐபிஎல் தொடரில் நிர்வாகப் பொறுப்புகளை JSW குழுமம் ஏற்றுள்ளதால், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சி மற்றும் உதவியாளர்கள் குழு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி கிரிக்கெட் இயக்குநராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் மீண்டும் பொறுப்பேற்கிறார். முன்னதாக GMR மேனேஜ்மென்ட் அமைத்த பழைய பயிற்சியாளர்கள் குழு விலகியதைத் தொடர்ந்து, யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரப்பூர்வப் பயிற்சியாளராக இது அவருக்கு முதல் முறை என்றாலும், ஏற்கனவே சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் போன்ற தற்போதைய முன்னணி இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக (Mentor) இருந்து அவர்களின் ஆட்டத்தை மேம்படுத்திய பெருமை யுவராஜ் சிங்கிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் பயிற்சியாளர்களின் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரிக்கி பாண்டிங் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆஷிஷ் நெஹ்ரா ஆகிய இருவருமே முதலிடத்தில் (தலா ரூ. 9.5 கோடி) உள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டீபன் பிளெமிங் (ரூ. 7.5 கோடி) இரண்டாம் இடத்திலும், தற்போது டெல்லி அணியில் இணைந்துள்ள யுவராஜ் சிங் (ரூ. 6கோடி ) அடுத்த இடத்திலும் உள்ளனர். மேலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஜாகீர் கான் (ரூ. 5 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராகுல் டிராவிட் (ரூ. 4.5 கோடி) ஆகியோர் இப்பட்டியலில் அடங்குவர்.
ஆறு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ள யுவராஜ் சிங், 2014 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் 14 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டு அன்றைய காலகட்டத்தில் புதிய சாதனை படைத்தார். 2019 இல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ள யுவராஜ் சிங், தற்போது பயிற்சியாளராகத் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளார்.

























