Aug 24, 2026 - 06:27 PM





செலான் வங்கி பிஎல்சி, அதன் நிர்வாகமற்ற பணிப்பாளரான திரு.கிரிஷான் திலகரத்னவை 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி முதல் பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
திரு.திலகரத்ன, 2018ஆம் ஆண்டு பணிப்பாளர் சபையின் நிர்வாகமற்ற பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பிரதித் தலைவராக அவரது நியமனம், முன்னேற்றகரமான பயணத்தில் அவரது நீண்டகால நிர்வாகத் திறனையும் தலைமைத்துவத் திறனையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அவர் தற்போது LOLC Finance PLCஇன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுவதுடன் LOLC Holdings PLCஇன் சிரேஷ்ட முகாமைத்துவக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
திரு.திலகரத்ன வங்கி மற்றும் நிதித்துறையில் மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், தனது 19 ஆவது வயதில் செலான் வங்கியில் வங்கி உதவியாளராக தனது தொழில்முறை வாழ்வைத் தொடங்கினார். பின்னர் 1995இல் LOLC குழுமத்தில் இணைந்தார். இன்று, அவர் முகாமைத்துவம், கடன், சனல் முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், factoring, போர்ட்ஃபோலியோ முகாமைத்துவம் மற்றும் இஸ்லாமிய நிதி ஆகியவற்றில் 31 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தை கொண்டுள்ளார்.
தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில், குறிப்பாக பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கசகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் பதவி வகித்துள்ளதன் மூலம் அவர் சர்வதேச ரீதியாக பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் அவர், LOLC Moliya, தஜிகிஸ்தான், OJSC Micro Finance Company ‘ABN’, கிர்கிஸ்தான், R-Finance, கசகஸ்தான், Prasac Microfinance Institution Ltd, கம்போடியா மற்றும் LOLC Egypt ஆகிய நிறுவனங்களில் தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்துள்ளதுடன் தஜிகிஸ்தானில் Lombard Micro Finance Company நிறுவனத்திற்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
இலங்கையில், நிதிச்சேவைகள் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள திரு.திலகரத்ன, இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (Non-Bank Financial Institutions) உயர்மட்ட பிரதிநிதித்துவ அமைப்பான Finance Houses Association of Sri Lanka (FHASL)இன் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
இங்கிலாந்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (CIMA) Passed Finalist ஆகவும், Institute of Bankers of Sri Lanka (AIB) இன் இணை உறுப்பினர் ஆகவும் உள்ள திரு.திலகரத்ன, ஐக்கிய அமெரிக்காவின் Harvard Business Schoolஇல் நுண்கடன் துறைக்கான மூலோபாய தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தையும் நிறைவு செய்துள்ளார்.























