Aug 25, 2026 - 04:07 PM





டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' என்பவரை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
இன்று (25) அதிகாலை 05.20 மணிக்கு டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் UL-226 என்ற விமானத்தின் மூலம் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்றினால் இவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
'பஸ் லலித்' என்பவருக்கு எதிராகக் கொலைக் குற்றங்கள், குற்றச் செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்களும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாணத் தெற்கு குற்றப்பிரிவினால் இந்தச் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டிருந்ததோடு, கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றத்திற்காகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2021.09.20 அன்று நெலுன்துடுவை பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்கு முன்பாகச் சென்று துப்பாக்கிப் சூடு நடத்திப் பலத்த காயங்களை ஏற்படுத்த முற்பட்டமை தொடர்பில் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2022.10.16 அன்று மூவரைக் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாகவும் 'பஸ் லலித்' என்பவருக்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.























