Aug 26, 2026 - 05:59 PM





நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவிக்கையில் தற்போது 85 - 100 இலங்கையர்கள் நேபாளத்தில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.
நேபாளத்தில் திரிசூலி ஆறு திடீரென பெருக்கெடுத்தமையினால் வடக்கு ரசுவா பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தினால் 400 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் காணாமல் போனவர்களில் 291 பேர் வௌிநாட்டவர்கள் என முதற்கட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன.
அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், இலங்கையர்கள் எவரேனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும் தொடர்ந்தும் இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.























