Aug 30, 2026 - 06:52 AM





கிவ் நகரின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உக்ரைன் இராணுவத்திற்கான ஆயுதங்களை சேமித்து வைக்கும் களஞ்சியசாலை ஒன்றின் மீது ரஷ்ய நடத்திய ட்ரோன் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக அங்கிருந்து சுமார் 400 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை பின்னிரவில் நடந்த இந்தத் தாக்குதலால் அங்குள்ள பீரங்கி குண்டுகள், கண்ணிவெடிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வெடித்ததில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் உள்ளிட்ட அருகிலுள்ள கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதச் சேமிப்பு தளம் நிச்சயமாக அங்கு இருந்திருக்கக் கூடாது என்று கூறிய அவர், மக்களுக்கு அருகிலேயே வெடிபொருட்களை சேமித்து வைத்தவர்களின் அலட்சியம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீப மாதங்களில் கிவ்வுக்கு அருகில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலைகள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இது மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தைத் தூண்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த பயங்கர தாக்குதலில் காயமடைந்த 42 பேரில் நான்கு குழந்தைகளும் அடங்குகின்றனர்.
இந்த தாக்குதல் காரணமாக அக்கிராமத்தில் சுமார் 130 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.























