Aug 31, 2026 - 12:37 PM





யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நெல்லியடிப் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதுடன், வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் (CCTV) குறித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர் தலைமையிலான கும்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வீட்டாரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குத் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்தச் சந்தேகநபர்களை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.























