Aug 31, 2026 - 01:50 PM





பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டமொன்றிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.
இந்த விசாரணை தொடர்பில் முன்னர் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தருமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அந்த நேரத்தில் ஆணைக்குழுவில் ஆஜராகியிருக்கவில்லை.
இதன் காரணமாக அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கும் சென்றிருந்த நிலையில், அந்த நேரத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை.
தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக வாக்குமூலத்தை வழங்குவதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.























