Aug 31, 2026 - 04:57 PM





நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த 26 ஆம் திகதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள சிறு கிராமங்கள், சிறுநகரங்கள் அழிந்தன. பாலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
இந்தியர்கள் உள்பட 30 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனார்கள். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணியின்போது நாள்தோறும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இன்று (31) 6 ஆவது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. காணாமல் போனவர்களை தேடும் பணியிலும் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேபாள பெருவெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 903 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதை நேபாள அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
சித்வான் மாவட்டத்தில் 272 உடல்களும், நவல்பராஷி கிழக்கு மாவட்டத்தில் 207 உடல்களும், நவல்பராஷி மேற்கு மாவட்டத்தில் 151 உடல்களும், கோர்கா மாவட்டத்தில் 62 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நுவா கேட்டில் 95, தாடிங்கில் 55, தனஹுவில் 37, ரசோவாவில் 27 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
85 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 320 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 4,247 பேர் காணாமல் போய் இருப்பதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 10,451 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.























