Sep 2, 2026 - 01:40 PM

அமெரிக்க போதைப்பொருள் அமுலாக்க நிர்வாகத்தின் (DEA) புது டெல்லிலுள்ள நாட்டு அலுவலகமும், இலங்கையின் பொலிஸ் போதைப்பொருள் பணியகமும் (PNB), கிரிஸ்டல் மெத்தம்ஃபெட்டாமைன் போதைப்பொருளை இலங்கை வழியாக சர்வதேச சந்தைகளுக்குக் கடத்த முயன்ற, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடித்து, ஒரு வெற்றிகரமான கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன.
பாகிஸ்தானிலிருந்து கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான கடல்வழி கொள்கலன்கள் தொடர்பாக ஓகஸ்ட் 14 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை, அமெரிக்க போதைப்பொருள் அமுலாக்க நிர்வாகத்தின் Foreign Counterparts Unit Pakistan Anti-Narcotics Force சிறப்பு விசாரணைப் பிரிவு விருத்தி செய்த உளவுத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகம், குளியல் துவாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த (21 மில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்த) சுமார் 463 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்ஃபெட்டாமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்ததுடன், பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட பல சந்தேக நபர்களையும் கைது செய்தது.
பயங்கரவாதத்திற்கு நிதியளித்து, எமது இரு நாடுகளிலுமுள்ள சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகடந்த குற்ற நிறுவனங்களை சீர்குலைப்பதில், அமெரிக்க - இலங்கை பங்காண்மையின் வலிமையை இந்நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இவ்வொத்துழைப்பானது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்ட அமுலாக்க விவகாரங்கள் பணியகத்தினூடாக (INL) இலங்கை பொலிஸ் மற்றும் சுங்கத்துறைக்கு நீண்ட காலமாக வழங்கி வரும் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
நாடுகடந்த குற்ற அமைப்புகளைத் தீவிரமாகப் பின்தொடர்வதற்கும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் அவற்றிற்குக் கிடைக்கும் வருவாயை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தலின் விளைவாக ஏற்படும் அபாயங்களிலிருந்து எமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், இலங்கை மற்றும் பிராந்தியத்திலுள்ள ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா உறுதியுடனுள்ளது.



























