Sep 4, 2026 - 10:25 AM

16 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து 14 வயது நிரம்பிய சொந்த மகளின் நண்பியை பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 15 வருட கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலாக 50,000 ரூபாய் தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ஒரு மில்லியன் ரூபாவும் வழங்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன், 2020 ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் சிறுமி தங்கியிருந்த போது அங்கு வைத்து 10 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதையும் பாதிப்பையும் கவனத்தில் கொண்டு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் குற்றப்பணமும் விதிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
மூன்றாவது சம்பவமாக, இரண்டு சந்தர்ப்பங்களில் 14 வயது நிரம்பிய சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், நபரொருவர் குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தக் குற்றச் சம்வங்களைப் புரிந்த குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 50,000 ரூபாய் குற்றப்பணமும் விதிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
பெருகி வரும் இத்தகைய குற்றங்களுக்கெதிரான இத்தகைய தண்டனைகள் குற்றவாளிகள் மத்தியில் பயத்தையும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் கொண்டு வரும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



























