Sep 4, 2026 - 10:33 AM

கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் 2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள், வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையிடம் அவர் இன்று (4) இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட மீட்புப் பணிகளின் முதல் 4 மாதங்களில், வீதிகளை அமைப்பதற்கும், தற்காலிக முகாம்களைக் கட்டுவதற்கும், குடிநீர் வழங்குவதற்கும் மற்றும் மின்சாரத்தை சீரமைப்பதற்கும் மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 52.6 மில்லியன் டொலர்களாக இருக்கும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
இவை மதிப்பிடப்பட்ட தொகைகளாகும். தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து நாங்கள் இதனைத் தயாரித்துள்ளோம் என்று கூறிய அவர், விரிவான மதிப்பீடு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20,000 வீடுகளை நேபாளம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும் என்றும், அவற்றில் குறைந்தபட்சம் 7,500 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவுடனான நேபாள எல்லைப் பகுதியில் ஒகஸ்ட் 26 அன்று பனிப்பாறை ஒன்று சரிந்து வீழ்ந்ததால் திரிசூலி ஆற்றில் பனி, பாறை மற்றும் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் நகரங்கள் மற்றும் கிராமங்கள் துடைத்தெறியப்பட்டதுடன் 1,250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் 4,200 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.



























