Sep 7, 2026 - 04:32 PM

இந்தியாவின் உத்தரபிரதேச டி20 லீக் தொடரில் மீரட் மேவரிக்ஸ் அணியை சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தியதன் மூலம், இந்திய அணியின் நட்சத்திர இடதுகை துடுப்பாட்ட வீரர் ரிங்கு சிங், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு போட்டி போட தயாராகி வருகிறார்.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ரிங்கு சிங் தலைமையிலான மீரட் மேவரிக்ஸ் அணி, புவனேஷ்வர் குமார் தலைமையிலான லக்னோ ஃபால்கன்ஸ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
டெல்லியில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த ரிங்கு சிங், இந்த லீக் தொடரில் தனது நேர்த்தியான கேப்டன்சி மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.
இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் ரிங்கு சிங் 5 ஆவது வீரராக களம் இறங்கி 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த போதிலும், தொடக்க வீரர் திவ்யான்ஷ் ஜோஷி 40 பந்துகளில் 105 ஓட்டங்களை குவித்ததன் மூலம் மீரட் மேவரிக்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை குவித்தது.
204 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ ஃபால்கன்ஸ் அணி 16 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்த 2026 ஆம் ஆண்டு UPT20 தொடரில், ரிங்கு சிங் தலைமையிலான மீரட் மேவரிக்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதன் மூலம், அவருடைய அபார கேப்டன்ஷி திறமை வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை அணி தலைவராக ரிங்கு சிங் செயல்பட்டார். அந்த சீசனில் அஜிங்கியா ரஹானேவின் தலைமையின் கீழ் அவர் அனைத்து 14 போட்டிகளிலும் விளையாடினார்.
தற்போது ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டதால், கேகேஆர் அணி புதிய கேப்டனைத் தேடி வருகிறது. இந்த நிலையில், அணி தலைவர் பொறுப்பை ஏற்க ரிங்கு சிங் ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளார்.
ரிங்கு சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் சுமார் 8 ஆண்டுகளாக கேகேஆர் அணியுடன் இணைந்து பயணித்து வருகிறார். இதுவரை விளையாடி உள்ள 73 ஐபிஎல் போட்டிகளில் அவர் 1,394 ஓட்டங்களை குவித்துள்ளார். மேலும், 2026 ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் அதிக ஓட்டங்களை குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் ரிங்கு சிங் உலக அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.



























