Sep 9, 2026 - 10:34 PM

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (09) முற்பகல் கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது.
மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒகஸ்ட் 25 ஆம் திகதி தனது நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்த பின்னர் இலங்கைக்கான சீனத் தூதுவராகக் கடமைகளை ஆரம்பித்துள்ள வெய் ஹுவாசியாங் அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசமும் கலந்துகொண்டிருந்தார்.
இச்சந்திப்பின் போது, சீன நாகரிகத்தின் ஆழமான அர்த்தத்தை மிகவும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய சிறப்புப் புத்தகமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் வழங்கி கௌரவித்தார்.
அதற்காகத் தூதுவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இலங்கை கலாசாரத்தையும் மக்களையும் அன்புடன் ஏற்றுக்கொண்டு, நட்புறவு மற்றும் மூலோபாயப் பங்களிப்புடன் இரு நாடுகளும் இதுவரை பயணித்த பாதையை நினைவுகூர்ந்ததுடன், சீனா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.



























