Sep 9, 2026 - 06:26 PM

தவெக தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்கு இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
இதனிடையே தவெக தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 01 ஆம் திகதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2 ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (09) நடைபெற்றது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தவெகவின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



























