Sep 9, 2026 - 06:02 PM

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (9) மீட்கப்பட்டுள்ளது.
அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பாடசாலைக்கு அருகாமையில் குறித்த நபருடைய கைப்பை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று காலை முதல் மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நேர தேடுதலின் பின்னர், நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



























