Sep 9, 2026 - 05:17 PM

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (நீக்கல்) சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக 2025 ஒகஸ்ட் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்காகவே இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அச்சட்டத்தின் மூலம், அன்றைய காலகட்டத் தேவைகளுக்கு ஏற்ப முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளுக்காகப் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி நிறுவப்பட்டிருந்தது.
அதற்கமைய, இச்சட்டமூலத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சட்டம் நீக்கப்படுவதன் மூலம் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியும் முடிவுக்கு வரவுள்ளது.
மேலும், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களும், பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்படும்.



























