Sep 13, 2026 - 04:37 PM

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டுத் திட்ட வளாகம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களுடன் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 7 கிராம் 'குஷ்' போதைப்பொருள், 32 கிராம் 'ஹேஷ்' போதைப்பொருள், 4 கிராம் ஹெரோயின், 20 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் உழைக்கப்பட்ட 1,08,400 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபர்களில், கடந்த மாதம் 4ஆம் திகதி தெஹிவளை - நெதிமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேல் விசாரணைக்காகக் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.





























