Sep 13, 2026 - 07:39 PM

மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டியானது இன்றிரவு 8 மணிக்கு டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்றதன் பின்னர் கருத்து வௌியிட்ட இந்திய அணியின் தலைவி ஹர்மன்பிரீத் கவுர், ஒரு முக்கிய போட்டியில் ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையை அடைய விரும்புவதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பிரதிகா ராவலுக்குப் பதிலாக கமலினி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு கருத்து வௌியிட்ட இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து, தாம் முதலில் களத்தடுப்பையே தேர்வு செய்ய நினைத்ததாகவும், இதனால் இரு அணிகளுக்கும் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை அணியில் காவிந்திக்குப் பதிலாக விஷ்மி குணரட்ன சேர்க்கப்பட்டுள்ளார்.
அனுபவத்தின் அவசியமே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என சமரி கூறினார்.
ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அழுத்தத்தைக் கொடுப்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.





























