Sep 15, 2026 - 01:47 PM

தெஹிவளையில் கை்குண்டுத்தாக்குதல் நடத்தி இரு சிறுவர்களைப் படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் தொடர்பாகப் பல முக்கிய தகவல்களைப் பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர்.
அதற்கமைய, அவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதன்பின்னர் அவரது கால் அகற்றப்பட்ட நிலையில், உயிரிழந்த இரு சிறுவர்களின் உடல்களுக்கான இறுதிச் சடங்குகள் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் நேரடி மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் விளைவாக, கைக்குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காகக் குற்றவாளிகள் வந்த முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காகக் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஒப்படைத்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்த நிலையத்தின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இத்தாக்குதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் 'கொஸ்மல்லி' மற்றும் 'போதியவத்த அவிஸ்க' ஆகிய குற்றவாளிகளின் ஆலோசனையின் பேரிலேயே இவர்கள் இந்தச் செயலைச் செய்துள்ளனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதனிடையே, குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் 'கொஸ்மல்லி' என்பவரின் மாமாவைத் தேடி பல பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றன.
அவர் குறித்துப் பல முக்கிய தகவல்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சந்தேகநபர் வந்த முச்சக்கர வண்டியைச் செலுத்தியதாகக் கூறப்படும் நபர் தொடர்பிலும் பொலிஸார் பல தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.
அவர் களுபோவில, சரணங்கர வீதிப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, 'போதியவத்த அவிஸ்க' என்பவரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலைப்பின்னலை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 2 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 504 கிராம் ஹெரோயின், மின்னணுத் தராசு ஒன்று, 2 ரப்பர் முத்திரைகள் மற்றும் 2 கைப்பேசிகள் மீட்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.





























