Sep 16, 2026 - 09:11 AM

கொழும்பு 07, பான்ஸ் வீதியில் அமைந்துள்ள சொத்து ஒன்றுக்கு தொடர்புடைய போலி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அதன் நிதிப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நேற்றைய தினம் (15) களுத்துறை நகரப் பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராவார்.
சந்தேகநபர் குறித்த சொத்து தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சொத்தினை ஒரு கோடி ரூபாய் பணத்திற்கு விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























