Sep 17, 2026 - 03:45 PM

'கே.ஜி.எஃப்' படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான 'டாக்சிக்' (Toxic) திரைப்படம் திரையரங்குகளில் தோல்வியடைந்துள்ளது. இது தொடர்பாக இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அக்ஷய் ஓபராய் விளக்கம் அளித்துள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், சுமார் 500 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட 'டாக்சிக்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்தியாவில் 24,579 காட்சிகளுடன் தொடங்கப்பட்டு முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த போதிலும், 19 ஆவது நாளில் அதன் வசூல் ரூபா 24 லட்சமாகக் குறைந்தது. இந்தி மொழியில் ரூ.150 கோடியும், உலகளவில் மொத்தம் ரூ.300 கோடியும் மட்டுமே வசூலித்து இப்படம் தோல்வியடைந்துள்ளது.
இப்படத்தின் தோல்விக்குப் பிறகு, படப்பிடிப்பில் யாஷ் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதாகவும், இயக்குநர் கீது மோகன்தாஸ் பெயர் அளவுக்கு மட்டுமே இயக்கியதாகவும் செய்திகள் பரவின. இதற்குப் பதிலளித்த அக்ஷய் ஓபராய், "படப்பிடிப்பு தளத்தில் என்னை இயக்கியது ஒரே ஒரு நபர் தான், அது கீது மோகன்தாஸ். இணையத்தில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம், ஆனால் படப்பிடிப்பில் நடந்தது எனக்கு மட்டுமே தெரியும்" என்று கூறி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
படத்தின் தோல்வி குறித்துப் பேசிய அக்ஷய், "சில நேரங்களில் மோசமான படங்கள் கூட பெரிய அளவில் வசூல் செய்யும். நாங்கள் 'டாக்சிக்' திரைப்படத்தை சர்வதேசத் தரத்தில் உருவாக்கப் பேரார்வத்துடன் உழைத்தோம். ஆனால், எங்கோ இலக்கைத் தவறவிட்டுவிட்டோம். இதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
நயன்தாரா, தாரா சுதாரியா, கியாரா அத்வானி, யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் என அனைவரும் ஒரு குடும்பம் போல் உழைத்தோம். முடிவுகள் நம் கையில் இல்லை" எனக் கூறினார்.
நடிகர் யாஷ் குறித்துப் பேசிய அவர், "யாஷ் எவருக்காகவும் காத்திருக்காதவர்; அவர் தன்னை மட்டுமே நம்புகிறார். கன்னட சினிமாவை சர்வதேசத் தளத்திற்குக் கொண்டு செல்ல முயன்ற அவரது லட்சியத்தைப் பாராட்ட வேண்டும்.
படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகளின் (Post-production) போது அவர் என்னை மிகவும் ஈர்த்தார். இப்படத்தில் பல கதாபாத்திரங்களின் வசனங்களுக்கு நான் குரல் கொடுத்து, பின்னர் AI தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்தோம். சினிமா மீதான அவரது ஆர்வம் எனக்குப் புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.





























