Sep 18, 2026 - 09:34 AM

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் காரியாலயம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
அம்பாறை மாவட்டக் காரியாலயத்திற்கு வருகை தந்த தமிழக அமைச்சரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகங்களின் நலன்கள். இரு பிராந்திய சமூக மற்றும் கல்விசார் முன்னேற்றங்கள். இருதரப்பு பரஸ்பர நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமாகக் கலந்துரையாடப்பட்டது.
இதனை தொடர்ந்து, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த தமிழக அமைச்சருக்கு, ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் வளாகத்தில் சிறப்பான வரவேற்பளித்தனர்.
அங்கு பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உயர்கல்வித் துறைசார் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் கல்முனை முன்னாள் முதல்வருமான சிராஷ் மீராசாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்புத் தூதுக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இவ்விஜயமானது இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான சமூக, கலாச்சார மற்றும் கல்விசார் நல்லுறவுப் பாலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.





























