Sep 23, 2026 - 10:31 PM

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பு தேவையில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ள பின்னணியில், அது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமைவாக கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் வாக்களிப்பதற்கும் சுதந்திரம் வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நலின் டி சில்வா ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 120, 121 மற்றும் 123 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம், இச்சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கமானது முக்கியமாக இச்சட்டமூலமோ அல்லது அதன் ஏதேனும் ஏற்பாடோ 83 ஆம் உறுப்புரையின் பிரகாரம் சர்வசன வாக்கெடுப்பினில் மக்களது அனுமதியை தேவைப்படுத்துகின்றதா என்பது உள்ளடங்கலாக அதனை நிறைவேற்றுவதற்கான அரசியலமைப்புத் தேவைப்பாடுகளை தீர்மானித்தலாகும் என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தீர்மானம் என்பது முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது சிறந்த கொள்கையா அல்லது மோசமான கொள்கையா, விரும்பத்தக்கதா அல்லது விரும்பத்தகாததா, அறிவார்ந்ததா அல்லது பாராளுமன்றம் அதனை நிறைவேற்ற வேண்டுமா என தீர்மானிப்பதல்ல என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் இலங்கையின் முந்தைய அரசியலமைப்பு திருத்தங்களில் சான்றாகக் காணப்படுகின்றன.
இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் 48 வருட வரலாற்றில், அரசியலமைப்பிற்குட்பட்டதாயினும் ஜனநாயகம், அரசியலமைப்புவாதம், நீதித்துறை மற்றும் சட்டவாட்சியின் சுயாதீனம் என்பவற்றின்மீது மறைக்கணிய தாக்கத்தினை ஏற்படுத்திய பல திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த சங்கம் நினைவூட்டியுள்ளது.
இச்சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தினை பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டுமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும். இதற்கான பொறுப்புடைமையானது பாராளுமன்றத்தின் மீதும் மீது வாக்களிக்கும்போது ஒவ்வொரு உறுப்பினர் மீதுமாக காணப்படுகின்றது.
தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, 22வது திருத்தம் எம் தேசத்தின்மீது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான பின்விளைவுகள் குறித்து சிந்தித்தல் வேண்டும்.
22வது திருத்த அறிமுகத்திலான வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் முறையான கலந்தாலோசனை நடைமுறைகளில்லாது காணப்பட்டமை குறித்து அவர்கள் கருத்திற்கொள்ளவேண்டும்.
மக்களின் பிரதிநிதிகளாக, முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் தொடர்பில் முப்பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் ஆயம், இலங்கைத் திருச்சபை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவையாளர்கள் சங்கம், பொதுநலவாய நாடுகளது சட்டத்தரணிகள் சங்கம், LAWASIA, சர்வதேச நீதிபதிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளது சுயாதீனத்திற்கான விசேட அறிக்கையாளர், பிரெஞ்சு தேசிய சட்டத்தரணிகள் சங்கம் அத்துடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் ஏனைய முன்னணி உயர்தொழில்சார் அங்கங்கள் உள்ளடங்கலாக 40 இற்கும் மேற்பட்ட உயர்தொழில்சார் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளடங்கிய பரந்தவொரு சமுதாயத்தினால் வெளிப்படுத்தப்பட்ட கரிசனங்களை அவர்கள் கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.
அதற்கிணங்க, தங்களது மனசாட்சிப் பிரகாரம் 22வது திருத்தம் குறித்து பேசுவதற்கும் வாக்களிப்பதற்கும் தங்களது உறுப்பினர்களை அனுமதிக்குமாறு பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இலங்கை சங்கம் சட்டத்தரணிகள் அழைப்பு விடுக்கின்றது.
வாக்களிக்க அழைக்கப்படுகின்றபோது, தங்களது அரசியலமைப்பு பொறுப்புடைமை, தங்களது பிரதிநிதித்துவ திறன் என்பவற்றுடன் மிக முக்கியமாக இலங்கை மக்களது இறைமைக்கான அவர்களது கடமை என்பவற்றை கருத்திற்கொண்டு தங்களது மனசாட்சிப்பிரகாரம் கொள்கைரீதியிலான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய பொறுப்பு தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களிடமே காணப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.































