Sep 24, 2026 - 03:35 PM

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து வருகின்றது.
நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி நீர்வழிந்து ஓடத் தொடங்கியுள்ளது. அதேபோல், தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதன் காரணமாகக் கொத்மலை ஓயாவை அண்மித்த பகுதிகள், நீர்த்தேக்கங்களுக்குக் கீழ் உள்ள தாழ்நிலப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகளும் பொறியியலாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் நிலவும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயமும் மண்சரிவு அபாயமும் நிலவுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இன்று (24) காலை 11 மணிக்கே முன்கூட்டியே மூடப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ை
மழையுடன் சேர்ந்து பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டமும் பலத்த காற்றும் கடும் குளிரும் நிலவுவதால், பொதுமக்களின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வீதிகளில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் வாகனச் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மலைப்பாங்கான பாதைகளில் பயணிக்கும் போது மண்சரிவு, பாறைச் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் போன்ற ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.































