Sep 25, 2026 - 02:31 PM

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான ஹட்டன் - ரூவன்புர பகுதியில் உள்ள காணிகளை வழங்கி வைப்பதாகக் கூறி நபர்களிடமிருந்து பணம் பெற்ற சம்பவம் தொடர்பாக ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நகர சபை உறுப்பினர் சுந்தரராஜ் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (24) இவர் கைது செய்யப்பட்டதுடன், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், குறித்த நகர சபை உறுப்பினர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், பெற்றுக் கொண்ட 6 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கும் அவர் சம்மதித்துள்ளார்.
இதன்காரணமாக, சந்தேகநபரை 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், இந்த வழக்கை மீண்டும் ஒக்டோபர் 22 ஆம் திகதி விசாரணைக்கு அழைப்பதற்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபர் 2022ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தர் ஒருவருடன் இணைந்து, ஹட்டன் ரூவன்புர பகுதியில் உள்ள ஆணைக்குழுவின் காணிகளை வழங்கி வைப்பதாகக் கூறி, தனது கணக்கிற்கு 6 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை பல நபர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு இதுவரை காணியை வழங்காமல் இருந்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த நகர சபை உறுப்பினருக்கு எதிராக ஹட்டன் பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஹட்டன் கோட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, சந்தேகநபரின் வங்கித் கணக்கு அறிக்கைகளைப் பெற்று சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, சந்தேகநபர் இதுபோன்ற பல பண மோசடிகளுடன் தொடர்புடையவர் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்த பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த பண மோசடியுடன் தொடர்புடைய காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அந்தப் பணத்தை இன்றைய தினமே (25) முறைப்பாட்டாளருக்குச் செலுத்தாவிட்டால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நேரிடும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், முறைப்பாட்டாளரின் பணத்தை இன்றைய தினமே நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு சந்தேகநபர் உடன்படுவதாக அறிவித்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.































