Sep 25, 2026 - 04:34 PM

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் கருத்து தெரிவிக்கையில், முறைசாரா நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே பொஸ்பேட் ஏற்றுமதி செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய சந்தேகநபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
குறித்த நிறுவனங்களுக்கு பொஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான உரிமங்களைப் பெறுவதற்கு ஆதரவளித்தமை மற்றும் உதவி செய்தமையின் மூலம் இலஞ்சமாக 81 இலட்சம் ரூபாயைக் கோரிப் பெற்று, அதனைத் தனது வங்கிச் கணக்கில் வைப்பு செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான்,சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.































