Sep 25, 2026 - 06:18 PM

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவரை மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கு இன்று (25) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது,ஷிரான் பாசிக்கின் பணத்தை இலங்கைக்கு கொண்டு வந்தமை மற்றும் பணமோசடி சம்பவத்துடன் தொடர்புடைய பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான சம்பத் அத்தடகே என்பவரையும் இவ்வழக்கின் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குறித்த சந்தேகநபர் நாட்டிற்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் அவரைக் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஷிரான் பாசிக் என்பவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டு, கம்பஹா பகுதியில் உள்ள சொகுசு வீடொன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே, கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.































