Sep 29, 2026 - 01:03 PM

பத்தாண்டு காலத்திற்கும் மேலான தமது கூட்டாண்மையின் முக்கிய மைல்கல்லாக, Sri Lanka Institute of Information Technology (SLIIT) மற்றும் பிரித்தானியாவின் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகம் (LJMU) ஆகியன இணைந்து SLIIT International எனும் பிரத்யேக சர்வதேச கற்றல் மையத்தை இலக்கம் 17, டிக்மன்ஸ் வீதி, கொழும்பு 04 இல் அண்மையில் திறந்து வைத்தன. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானிய உயர்கல்வியை இலங்கை மாணவர்களுக்கு வழங்க நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பை இது மேலும் மீள உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், SLIIT நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழக பிரதிநிதிகள், British Council பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழிற்துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகளை மாத்திரம் பிரத்யேகமாக வழங்குவதற்காக இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது கல்விக்கூடம் இதுவென்பதுடன், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையின் வலிமையையும் பக்குவத்தையும் இது வெளிப்படுத்துகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இக்கூட்டாண்மையானது 1,500 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளைக் கொண்ட வலுவான வலையமைப்பை உருவாக்கியுள்ளதுடன், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானிய பட்டப்படிப்புகளை நாட்டினுள்ளேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. புதிய கற்றல் மையமானது உலகத் தரம் வாய்ந்த சூழலில் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் பாடநெறிகளை நடத்துவதற்கும், எதிர்காலப் பாடநெறி விரிவாக்கம், மாணவர் அனுபவத்தை மேம்படுத்துதல், கல்விசார் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காகவும் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைல்கல் சாதனை குறித்து கருத்து தெரிவித்த SLIIT நிறுவனத்தின் துணைவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே, SLIIT International மையத்தின் தோற்றமானது லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்துடனான எங்களது நீண்டகால கூட்டாண்மையில் ஒரு முக்கிய புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இலங்கை மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியையும் சிறந்த அனுபவத்தையும் நாட்டினுள்ளேயே வழங்குவதும், சர்வதேச பார்வை, விமர்சன சிந்தனை மற்றும் உலகளாவிய ரீதியில் வெற்றிபெறத் தேவையான தொழில்சார் திறன்களை அவர்களுக்கு ஊட்டுவதுமே எமது நோக்கமாகும். இந்த பிரத்யேக கற்றல் மையமானது மாணவர் அனுபவத்தை வலுப்படுத்துவதுடன், எமது கூட்டாண்மையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுக்கிறது எனக் குறிப்பிட்டார்.
லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் கலாசாரப் பீடத்தின் சார்புத் துணைவேந்தர் (Pro-Vice-Chancellor) பேராசிரியர் டிமோதி நிக்கோல் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் (LJMU) பட்டப்படிப்புகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கற்றல் மையத்தின் அங்குரார்ப்பணமானது, எமது பல்கலைக்கழகத்திற்கும் SLIIT நிறுவனத்திற்கு இடையிலான கூட்டாண்மைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது எமது ஒத்துழைப்பின் வலிமையையும், உயர்தரமான கல்வியை இலங்கையில் வழங்குவதற்காக நாம் இருவரும் காட்டும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. மேலும், எமது கூட்டாண்மையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கையில், கல்விசார் ஒத்துழைப்பு, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மாணவர் பங்கேற்பு ஆகியவற்றை மேலும் ஆழமாக்குவதற்கான வாய்ப்புகளையும் இந்தப் புதிய மையம் உருவாக்குகிறது எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாக எல்லைகளைக் கடந்து: உலகளவில் போட்டியிடக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குவதில் பிரித்தானிய உயர்கல்வியின் பங்கு (Beyond Borders: The Role of British Higher Education in Developing Globally Competitive Graduates) எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் SLIIT-லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழக கூட்டாண்மையின் வரலாறு மற்றும் எதிர்காலம், புதிய SLIIT International மையத்தின் மூலோபாய முக்கியத்துவம், கல்வித் தரம், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் மற்றும் இலங்கையில் LJMU பாடநெறிகளின் நீண்டகால வளர்ச்சி ஆகியவை குறித்து ஆராயப்பட்டது.
பேராசிரியர் லலித் கமகே, பேராசிரியர் டிமோதி நிக்கோல், British Council பிரதிநிதி சஜீவ மீபகே மற்றும் கலாநிதி ஹர்ஷ கப்ரால் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். இலங்கையில் சர்வதேச கல்வி வாய்ப்புகளின் வளர்ச்சி, பிரித்தானிய பட்டப்படிப்புகளின் எதிர்கால விரிவாக்கம், பிரித்தானிய தகைமைகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையைப் பேணுதல், உலகளாவிய திறன்களுடன் கூடிய எதிர்காலத்திற்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்குதல் மற்றும் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதில் சர்வதேச உயர்கல்வியின் பங்கு ஆகியவை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் சட்டம், வணிகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளின் வளர்ந்து வரும் போக்குகள் குறித்தும், உலகளாவிய கல்வித் தரங்களைப் பேணும் பிரித்தானிய உயர்கல்வியின் பங்களிப்பு குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இவ்விழாவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் British Council-இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிளேயர் சியர்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து SLIIT International மற்றும் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கூட்டாண்மை ஆவணம் உத்தியோகபூர்வமாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இது இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் இலங்கை மாணவர்களுக்கான சர்வதேச கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் குறியீடாக உணர்த்தியது.
SLIIT International மையத்தின் அங்குரார்ப்பணமானது, SLIIT மற்றும் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான நீண்டகால கூட்டாண்மையின் அடுத்த கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. இப்புதிய மையம் மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் ஊடாக, விரைவாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் வெற்றிபெறத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் சர்வதேச பார்வையைக் கொண்ட, உலகளவில் போட்டியிடக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குவதை இரு நிறுவனங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளன.































