Sep 30, 2026 - 03:24 PM

டித்வா சூறாவளியால் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் நீளமுள்ள வீதிகளைப் புனரமைப்பதற்காக இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
உலக வங்கியின் கீழுள்ள சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் அவசரக்கால பதிலளிப்பு பிரிவின் மூலம் வழங்கப்படும் இந்த நிதி, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சந்தைகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான போக்குவரத்துத் தொடர்புகளை சீரமைக்கப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளைத் தாங்கும் வகையில் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற மீள்திறன் கொண்ட புதிய பொறியியல் தரநிலைகளுடன் இந்த வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.
இந்த புதிய நிதியுதவி மூலம் உலக வங்கியின் 'உள்ளடக்கிய இணைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின்' மொத்த முதலீடு 610 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் மக்கள் பயனடைவதுடன், 5,600க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தை தொடர்புகள் மீண்டும் ஏற்படுத்தப்படுவதன் மூலம் 22,000க்கும் அதிகமான தேயிலை, காய்கறி மற்றும் நெற் செய்கையாளர்கள் பயனடைவர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் வீசிய டித்வா சூறாவளியால் நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு சுமார் 973 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த நிதி நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு மீட்சிக்கு பெருமளவில் உதவும் என உலக வங்கி நம்பிக்கை வௌியிட்டுள்ளது.































