Sep 30, 2026 - 10:21 PM

குவாஹாத்தியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 405 ஓட்டங்கள் என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்தது.
அந்த அணி சார்பில் ஷாய் ஹோப் (104) மற்றும் ஜோன் கேம்ப்பெல் (101), அமீர் ஜாங்கோ (114) ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
406 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
அணித் தலைவர் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி முதலாவது விக்கெட்டுக்கு 255 ஓட்டங்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது.
ரோஹித் சர்மா 75 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 29 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் அபாரமாக துடுப்பாடிய தலைவர் சுப்மன் கில், 133 பந்துகள் 26 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 223 ஓட்டங்களை குவித்து, தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி 43.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து 39 பந்துகள் மீதமிருந்த நிலையில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 400 ஓட்டங்களை துரத்தி வெற்றி பெற்ற 2-வது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
2006-ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆபிரிக்கா 435 ஓட்டங்கள் இலக்கை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.































