Oct 1, 2026 - 09:45 AM

தேசிய செயற்கை நுண்ணறிவு விருதுகள் 2026 (National AI Awards 2026) நிகழ்வில் "ஊடகத் துறையில் சிறந்த AI தீர்வு" (Best AI Solution in Media) என்ற பிரிவின் கீழ் adaderana.lk வெண்கல விருதை வென்றுள்ளது.
இந்த AI தீர்வு Derana Macroentertainment அமைப்பின் Macro Labs நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT MOBITEL ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட 'இலங்கை AI வாரம் 2026' இன் ஒரு பகுதியாக, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே Monarch Imperial ஹோட்டலில் நேற்று (30) நடைபெற்ற 'தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டில்' இவ்விருது விழா நடைபெற்றது.
adaderana.lk என்பது செய்திகளை உருவாக்குவது மற்றும் ஆசிரியர் குழுவின் பணிமுறைகள் முதல், வாசகர்கள் செய்திகளைக் கண்டறிவது, புரிந்து கொள்வது மற்றும் அணுகுவது வரை முழுமையான செய்திப் பயணத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த AI அடிப்படையிலான ஊடக அமைப்பாகும்.
AI தொழில்நுட்பத்தை ஒரு தனிச் சாட்பாட் (Chatbot) ஆகவோ அல்லது தனித்து இயங்கும் கருவியாகவோ அறிமுகப்படுத்தாமல், அத தெரண தனது உள்ளடக்க முகாமைத்துவ அமைப்பு (CMS) மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாகச் சிறப்பு AI ஆற்றல்களை ஒருங்கிணைத்துள்ளது.
இத்தீர்வு ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பன்மொழி செய்திச் சுருக்கம், மொழி சார்ந்த AI குரல், நேரலைச் செய்திச் சுருக்கம், செய்திகளின் வளர்ச்சி மற்றும் காலவரிசை, ஒலி வடிவம் (Narrative Audio) மற்றும் இயல்பான மொழி அடிப்படையிலான அறிவார்ந்த தேடல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.































