Oct 2, 2026 - 08:31 AM

தமிழகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் தவெக தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று கடந்த புதன்கிழமை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் பி.கருணாகரன் ஆஜரானார்.
அப்போது, இந்த வழக்கில் நான் இதற்கு முன்பு தனிநபர் மனுதாரர் தரப்பில் ஆஜராகி வாதிட்டுள்ளேன். ஆனால், தற்போது தமிழக அரசு வழக்குரைஞராக பொறுப்பேற்றுள்ளதால், அரசு சார்பில் ஆஜராகவதில் நலன்சார்ந்த முரண்பாடு உள்ளது.
எனவே, வழக்கின் பொறுப்பை அரசு வழக்குரைஞர் கௌதமனிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளதால், விசாரணையை ஒத்திவைத்து அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள், தமிழகத்தில் தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து வாய்மொழியாகக் கருத்து தெரிவித்தனர்.
அப்போது, "தமிழகத்தில் இன்னும் சில விஷயங்கள் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைக்கு முதல்வர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு நல்ல தகவல்களே கிடைப்பதாகவும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்சிதேவா ஆகியோர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு, பொதுவான வழக்கு விசாரணையின் போது தமிழக முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறனை வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.































