Oct 1, 2026 - 11:25 PM

நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) கொழும்பில் நடைபெற்ற "நச்சற்ற பழங்கள் பிள்ளைகளுக்கு" எனும் கருப்பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் உள்ள பழக்கடைகள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களைப் பதிவு செய்யும் பணிகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படும் எனக் கூறினார்.
நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பழங்களைப் பழுக்க வைத்தல், இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பண்ணைகளிலிருந்து பழங்களை அறுவடை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு நம்பிக்கையுடன் விநியோகித்தல் ஆகியவை குறித்து வர்த்தகர்களுடன் கலந்துரையாடி அவர்களை இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதத்திற்குள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அடையாளங்காணப்பட்டு, அவற்றுக்குச் சிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பழக்கடைகளை வரைபடமாக்கி, QR குறியீட்டின் ஊடாக நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் இடங்களைக் கண்டறியக்கூடிய புதிய முறையொன்றும் தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.































