Oct 2, 2026 - 09:50 PM

இந்த வாரம் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டிற்கான அபுதாபி T10 லீக் தொடரில் ஐந்து வெவ்வேறு அணிகளுக்காக எட்டு இலங்கை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஏஷான் மாலிங்க ஆகியோர் யாஸ் லயன்ஸ் (Yas Lions) அணியில் இணைந்துள்ளனர்.
துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன மற்றும் ஜனித் லியனகே ஆகிய மூவரும் ரோயல் டெசர்ட் செம்பியன்ஸ் (Royal Desert Champions) அணியினால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார UAE புல்ஸ் (UAE Bulls) அணிக்காகவும், துனித் வெல்லாலகே அரேபியன் ஏசஸ் (Arabian Aces) அணிக்காகவும் விளையாடவுள்ள அதேவேளை, குசல் பெரேராவை எமிரேட்ஸ் ஈகிள்ஸ் (Emirates Eagles) அணி தேர்வு செய்துள்ளது.
இவர்களைத் தவிர, இலங்கையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் கிரிக்கெட் பயணத்தைத் தொடர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் அம்ஷி டி சில்வாவும் அரேபியன் ஏசஸ் அணியினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காலியில் பிறந்த இவர், இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி மற்றும் 'ஏ' அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பின்னரே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார்.
மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர், அமெரிக்க தேசிய அணியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2026 அபுதாபி T10 லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.































