Oct 6, 2026 - 01:21 PM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 2027 ஒருநாள் உலகக் கிண்ண தொடரை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா தனது கணிப்பை வெளியிட்டுள்ளார் அதில் அவர் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளின் பெயர்களையும் கூறவில்லை.
14 ஆவது ஒருநாள் உலகக் கிண்ண தொடர் 2027 அக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இத்தொடரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. உலகக் கிண்ண தொடருக்கான அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரையன் லாரா, பலம் வாய்ந்த இந்திய அணியையும் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியாவையும் தவிர்த்து விட்டு, தென் ஆப்பிரிக்க அணியைத் தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து பிரையன் லாரா பேசுகையில்,
"தென் ஆப்பிரிக்கா சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கிண்ணத்தை நடத்துகிறது. சொந்த நாட்டு ஆடுகளங்களின் சூழல் மற்றும் ரசிகர்களின் ஆதரவு அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். எனவே இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள எனது முதன்மை அணியாக தென் ஆப்பிரிக்காவையே நான் தேர்வு செய்கிறேன்" என்று தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா கடைசியாக 2003 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை நடத்தியிருந்தது. அதன்பிறகு 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருநாள் போட்டி உலகக் கிண்ண தொடரை நடத்த உள்ளது. இதுவரை அந்த அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை.
2023 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் களமிறங்கத் தயாராகி வருகிறது. அதேபோல் அவுஸ்திரேலியாவும் வலிமையாக உள்ளது. ஆனால் இந்த இரு முன்னணி அணிகளையும் தேர்ந்தெடுக்காமல் தென் ஆப்பிரிக்காவை லாரா தேர்வு செய்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் மேற்கிந்திய தீவுகள் அணி குறித்துப் பேசிய லாரா, "தரவரிசையில் 10 ஆவது இடத்தைப் பிடித்து உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியை இழந்தாலும், தகுதிச்சுற்று மூலமாக உள்ளே நுழைந்து மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணத்தில் மற்ற அணிகளுக்கு கடும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது" என்று கூறினார்.































