Oct 7, 2026 - 06:44 PM

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக இன்று (07) போராட்டம் நடத்திய நிலையில், ஜந்தர் மந்தர் அருகே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தது. இந்தச் சம்பவத்தின் போது தங்களை பொலிஸார் தாக்கியதாக போராட்டத்தில் ஈடுபட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்,
ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தனிச்சையாக முடிவுகளை எடுத்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாக ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்கள் புகார் எழுப்பி கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பு உள்ளிட்டவை டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர் பேரணிகளை அறிவித்து நேற்று (06) முதல் ஞானேஷ் குமாருக்கு எதிரான பேரணியையும், போராட்டத்தையும் தொடங்கின. நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்திக்க திட்டமிட்டு, இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் காலை 10.30 மணிக்கு பேரணி தொடங்கினர்.
அப்படி தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற இந்தியா கூட்டணி எம்.பிக்களை ஆகாஷ்வானி வளாகத்தின் அருகேயே காவல்துறை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மீண்டும் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் ஜந்தர் மந்தர் நோக்கி சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரணியைத் தொடங்கி மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணி எம்.பிக்களை ஜந்தர் மந்தர் செல்வதற்கு முன்னதாக தடுத்து நிறுத்திய பொலிஸார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தது. இந்தச் சம்பவத்தின் போது பொலிஸார் தங்களை தாக்கியதாக இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.































